×

பொங்கல் பண்டிகை நெருங்குகிறது பொள்ளாச்சி வாரச்சந்தையில் பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பு

*வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு போனது

பொள்ளாச்சி : தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி வாரச்சந்தையில் நேற்று பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பொங்கல் நெருங்குவதால் வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில், வியாழக்கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கிறது.

அப்போது ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம் மற்றும் உடுமலை, கனியூர், மடத்துக்குளம், பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும், பந்தய சேவல் (சண்டை சேவல்) விற்பனையும் நடக்கிறது. இங்கு கொண்டு வரப்படும் பந்தய சேவல்கள், வளர்ச்சிக்கு தகுந்தாற்போல் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்குவதால், நேற்று நடந்த ஏலநாளில் சுற்றுவட்டார கிராமங்களிலில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர், பந்தய சேவலை விற்பதற்காக அதிகளவில் கொண்டு வந்தனர். அவர்கள் கொண்டுவந்த பந்தய சேவல் ஒன்று ரூ.3000 முதல் ரூ.15 ஆயிரம் வரை என தரத்திற்கு தகுந்தாற்போல் விலை போனது.

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் பந்தய சேவலை வாங்க அதிகாலை முதலே சந்தையில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சந்தைக்கு கொண்டு வரப்பட்ட பந்தய சேவலை, சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்தும். பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் வந்த பலர் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர். இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு, நேற்று பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது.

மேலும், விலை நிர்ணயம் செய்வதற்கு முன்பு, சேவல்கள் ஒன்றுக்கொண்டு சண்டையிடச்செய்து, பார்த்து விலைபேசி வாங்கி சென்றனர். கட்டு சேவல் பந்தயம் நடக்கும்போது போலீசார் கண்காணித்து அதை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுகின்றனர். வரும் பொங்கலை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை விடப்படும். கிராமங்களில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், சேவல் கட்டு பந்தயம் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பொங்கல் பண்டிகை நெருங்குகிறது பொள்ளாச்சி வாரச்சந்தையில் பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Pollachi ,Pollachi market ,Tamil Thirunal Pongal festival ,Pongal ,Coimbatore ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...